வீட்டில் ஆசைக்கு செல்லமாக வளர்க்க நாய் வாங்குகிறோம் என்றால் அதற்கு ஒரு புதிய உயிரை குடும்பத்தில் சேர்க்கிறோம் என்று அர்த்தம். ஆனால் அவ்வாறு வீட்டில் வளர்க்க நாயை தேர்ந்தெடுக்கும் போது ஒரு பெரிய குழப்பமே மனதில் நிலவும். ஏனெனில் தற்போது நிறைய செல்லப்பிராணிகள் இருக்கின்றன. ஆகவே எதை வளர்த்தால் சரியானதாக இருக்கும என்ற குழப்பம் மனதில் பெரிதும் இருக்கும்.
அதிலும் நாயை வாங்கிவிட்டு, பின் ஒரு சிறு தவறு நடந்தாலும், பிறகு அனைத்துமே தவறில் முடிந்துவிடும். ஆகவே மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இப்போது நாயை வாங்கும் முன் எவற்றையெல்லாம் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று பார்ப்போமா!!!
* நாயை வாங்குகிறோம் என்றால் முதலில் எதற்கு வாங்க வேண்டும்? என்று யோசிக்க வேண்டும். ஏனெனில் அதற்கு காரணம் நிறைய உள்ளன. அதாவது மிகவும் பிடிக்கும் என்பதற்காக, பாதுகாப்பிற்காக அல்லது ஒரு நல்ல துணையாக இருப்பதற்காக என்ற காரணங்களுள் ஏதேனும் ஒன்றை தெளிவாக யோசித்துக் கொண்டால், பின் அதற்கேற்ப நாயை வாங்குவது என்பது எளிதாகிவிடும். ஏனென்றால் நாய்களுள் பல வகைகள் உள்ளன. ஆகவே எதற்கு என்பது தெளிவாகிவிட்டால், வாங்குவது ஈஸியாகிவிடும்.
* மற்றொன்று நாயை வாங்கியப் பின் அதனை நம்மால் சரியாக கவனிக்க முடியுமா? என்பதனையும் தெளிவாக யோசித்துக் கொள்ள வேண்டும். அதிலும் வேலைக்கு செல்பவர்கள் நாயை வாங்குவதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும். நாயை வாங்கினால் அதனை அடிக்கடி வெளியே அழைத்து செல்வது, அதனுடன் விளையாடுவது என்று அதனுடன் நேரத்தை செலவழிக்க வேண்டும். ஏனெனில் நாய் எப்போதும் தனிமையை விரும்பாது. இல்லை, முடியாது என்று இருப்பவர்கள், நாய் வாங்கும் எண்ணத்தை கைவிடுவது நல்லது.
* நாயை வாங்கினால், நம்மால் அதனை சரியாக பராமரிக்க முடியுமா? என்று சிந்திக்க வேண்டும். ஏனெனில் நாயை பராமரிப்பது என்பது எளிதானது அல்ல. அதற்கு நிறைய செலவாகும். அதனை அடிக்கடி கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுதல், அதற்காக கடைகளில் விற்கும் உணவுகளை வாங்கி கொடுத்தல், அதன் ஆரோக்கியத்திற்கு வேண்டியவற்றை செய்தல் போன்ற அனைத்தையும் நினைத்து, பின் வாங்க வேண்டும்.
* வீட்டிற்கு எந்த மாதிரியான நாயை வாங்க வேண்டும். இப்போது வீடு சிறியதாகவும் நாய் பெரியதாகவும் இருந்தால், அவற்றை பராமரிப்பது என்பது கடினமாகிவிடும். ஏனென்றால் அது செய்யும் குறும்புத்தனத்திற்கு அளவில்லாமல், அதனை கட்டுப்படுத்துவது என்பது கடினமாகிவிடும். ஆகவே சிறிய நாயை வாங்கினால், அதனை நாம் பழக்கப்படுத்தி, கட்டுப்படுத்திவிடலாம்.
ஆகவே மேற்கூறிய அனைத்தையும் நினைவில் கொண்டு, நாயை வாங்கினால், எந்த ஒரு பிரச்சனையுமின்றி, அதனுடன் சந்தோஷமாக விளையாடி மகிழலாம்.